வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு


வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. கேரள வியாபாரிகள் வராததால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட் தென்தமிழகத்தில் மிகவும் பெரியதாகும். இந்த மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளில் 80 சதவீதம் கேரளாவுக்கு லாரி மற்றும் வேன்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வியாபாரம் நடக்கும். 20 சதவீத காய்கறிகள் மட்டுமே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வியாபாரம் நடைபெறும்.

இந்தநிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக நேற்று காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு 30 சதவீத காய்கறிகள் மட்டுமே வரத்து இருந்தது.

ஏனெனில் வேலைநிறுத்தம் குறித்து விவசாயிகளுக்கு தெரிந்ததால் அதிகளவில் காய் கறிகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இந்த 30 சதவீதம் காய்கறிகளும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள வியாபாரிகள் யாரும் நேற்று காய்கறி மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால் நேற்று ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் பாதிப்படைந்ததாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

வரத்து குறைந்ததாலும், கேரள வியாபாரிகள் வராததாலும் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விலையிலும் சரிவு ஏற்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் (ஒரு கிலோ எடை) ரூ.17-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.13-க்கும், சின்னவெங்காயம்(பச்சை) ரூ.30-லிருந்து ரூ.18-க்கும், வெண்டைக்காய் ரூ.40-லிருந்து ரூ.12-க்கும், முருங்கைக்காய் ரூ.115-லிருந்து ரூ.80-க்கும், கத்தரிக்காய் ரூ.10-லிருந்து 8-க்கும், புடலங்காய் ரூ.8-லிருந்து ரூ.5-க் கும், அவரைக்காய் ரூ.17-லிருந்து 14-க்கும், மிளகாய் ரூ.28-லிருந்து ரூ.25-க்கும் விலை போனது.

Next Story