பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வுபெற்ற தபால்காரர் சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வுபெற்ற தபால்காரர் சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வு பெற்ற தபால்காரர் நெல்சன் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். அவர், சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வேதநகர் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் பிரகாஷ் (வயது 66), ஓய்வு பெற்ற தபால்காரர். இவர், சிறந்த தபால்காரர் என்ற விருது பெற்றவர். சந்திரபாபுவின் பாடல்களை விரும்பி பாடும் பழக்கம் உடையவர். எனவே இவர், நாஞ்சில் சந்திரபாபு என்றும் கூறுவர்.

கடந்த 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பணி ஓய்வு பெற்று இருந்த நெல்சன் பிரகாஷ், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். அதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 1-ந் தேதியே தொடங்கினார்.

அதாவது, கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் மூலம் பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரது சைக்கிளின் முன்புறமும், பின்புறமும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து வாசகங்களுடன் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்டி இருந்தார். அதே வாசகங்கள் எழுதப்பட்ட துணி பேனரை தனது உடலின் முன்புறமும், பின்புறமும் கட்டி இருந்தார்.

மேலும் பாண்டிதேவன் படத்தில் நகைச்சுவை நடிகராக சந்திரபாபு நடித்து பாடிய பாடல்களில் ஒன்றான “சொல்லுறத சொல்லிபுட்டேன், செய்யுறத செஞ்சிருங்க, நல்லதுனா கேட்டுங்குங்க. கெட்டதுனா விட்டுருங்க...” என்ற பாடலை பாடியபடி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை மேற்கொண்டார். கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர்.

பின்னர் அவர் டதி பள்ளி சந்திப்பு, மணிமேடை சந்திப்பு, நகராட்சி அலுவலக பகுதி, வடசேரி பஸ் நிலையம், அண்ணா சிலை சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் ஆகிய பகுதிகளிலும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். நெல்சன் பிரகாஷ் தோற்றம் மற்றும் அவரது பாடலை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி சென்றனர்.

இன்னும் ஒரு வாரம் மாவட்டம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதன்பிறகு நெல்லை மாவட்டத்துக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ள போவதாகவும் நெல்சன் பிரகாஷ் கூறினார்.

Next Story