வானூர் அருகே தூக்கில் மருத்துவ கல்லூரி மாணவர் பிணம்
வானூர் அருகே பல் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வானூர்,
வானூர் தாலுகா காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தேஷ்வர் அரவிந்த் (வயது 21), இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படாளத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மாணவர் தேஷ்வர் அரவிந்த் விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவரின் தந்தை ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
மாணவரின் சாவில் மர்மம் இருப்பதாக படாளம் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் உறவினர்கள் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் காட்ராம்பாக்கம் கிராமத்தில் மாணவரின் தாயாரும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான மைதிலி ராஜேந்திரன் தலைமையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் தங்கம், கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே மாணவர் மர்ம சாவு குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்தது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story