வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகளை இடிக்க தடை விதிக்க வேண்டும் கலெக்டரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்


வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகளை இடிக்க தடை விதிக்க வேண்டும் கலெக்டரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2019 9:35 PM GMT (Updated: 7 Jan 2019 9:35 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அடுக்குமாடி மார்க்கெட் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பலர் கூட்டாக வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வியாபாரிகள் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தற்போது நல்ல முறையில் இயங்கி வரும் வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு தனியார் பங்களிப்புடன் புதிதாக அடுக்குமாடி மார்க்கெட் கட்ட உள்ளதாக தெரிகிறது. தற்போது அதற்கு எந்த அவசியமும் இல்லை. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன. அந்த கடைகளை நம்பி 8 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி மார்க்கெட் கட்ட வேண்டும் என்றால் அதனை, நகரில் வேறு பொறுத்தமான இடத்தில் கட்டலாம். இங்கு கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநகராட்சி நிர்வாகம், இந்த மார்க்கெட்டை இடிக்க நியாயத்துக்கு முரணாக செயல்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி சார்பில் புதிய கட்டிடம் கட்ட நல்ல நிலையில் இருக்கும் இந்த மார்க்கெட்டை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறிஇருந்தனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் உள்ள முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் சரியான வேலை இல்லாமலும், ஊதியம் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அரசின் உதவி தொகை கிடைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவையும் கோர்ட்டு உத்தரவையும் மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் தியேட்டர்கள், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க தொடர்பு எண்களை பத்திரிகை மூலம் வெளியிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் கூட்டுறவு சங்க தூத்துக்குடி முத்தும், சங்கும் குளியாட்கள் சார்பில் மீனவர்கள் கென்சன், சந்தியா பட்சேக், செல்வகுமார் ஆகியோர் கொடுத்த மனுவில், ‘எங்களது மீன்பிடி மர வள்ளங்கள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டன. அவைகளை திரும்ப எடுத்து செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்த போது அந்த மர வள்ளங்கள் சேதம் அடைந்தன.

எனவே எங்களின் சேதம் அடைந்த மர வள்ளங்களுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மெஞ்ஞானபுரம் சடையநேரி கால்வாய் பாசனம் மற்றும் பம்ப் செட் விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து மழை காலங்களில் திறக்கப்பட்ட சிறிதளவு தண்ணீரில் சடையநேரிக்குளம் முழுமையாக நிரம்பவில்லை. ஆற்று பாசன குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ள நிலையிலும், அணைக்கட்டுகளில் போதிய தண்ணீர் இருந்த போதும் சடையநேரி கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு அந்த குளத்தை முழுமையாக நிரப்பி தர வேண்டும்’ என்று கூறினர்.

தூத்துக்குடியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அதே போல் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்’ என்று கூறி இருந்தனர்.

Next Story