ஆத்தூர் அருகே ஆடிட்டர் வீட்டில் 18 பவுன் நகைகள், ரூ.37 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


ஆத்தூர் அருகே ஆடிட்டர் வீட்டில் 18 பவுன் நகைகள், ரூ.37 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:05 PM GMT (Updated: 7 Jan 2019 10:05 PM GMT)

ஆத்தூர் அருகே ஆடிட்டர் வீட்டில் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.37 ஆயிரம் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆத்தூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). ஆடிட்டர். இவர் வாழப்பாடியில் அலுவலகம் வைத்துள்ளார். சரவணன் தனது மனைவி கற்பூரவல்லி மற்றும் மகன் ஆகியோருடன் கடந்த 4-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு காரில் சென்னைக்கு சென்றார். அங்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கற்பூரவல்லியின் தந்தை பிரபுதேவாவை பார்த்து நலம் விசாரித்தனர்.

அங்கிருந்து நேற்று அதிகாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டு மாடி அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.37 ஆயிரம் திருட்டு போனதாக ஆடிட்டர் சரவணன் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதுபற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story