சீட்டு முறையில் குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தர்ணா


சீட்டு முறையில் குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 Jan 2019 4:00 AM IST (Updated: 8 Jan 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

சீட்டு முறையில் குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு மற்றும் வெள்ளாறு அமைந்துள்ளது. இந்த ஆறுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரிகளை அரசு திடீரென மூடிவிட்டது.

மேலும் கடந்த சில மாதங்களாக விருத்தாசலம் மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரியும் மூடப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும் மாட்டு வண்டி மணல் குவாரிகளை திறக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மணவாளநல்லூர் மணிமுக்தா ஆற்றில் மணல் குவாரி மீண்டும் தொடங்கியது. இதுபற்றி அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் மாட்டு வண்டிகளுடன் குவாரிக்கு வந்து மணல் அள்ளினர். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த குவாரியில் மணல் அள்ள வேண்டுமானால் ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் தொழிலாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) அனுப்பப்படும். அதன்பிறகே மணல் அள்ள குவாரிக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு 25 மாட்டு வண்டிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்படும் என்றனர்.

அதற்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள், நாங்கள் எங்கே சென்று ஆன்லைனில் பதிவு செய்வது. எங்களுக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது. ஆன்லைனில் பதிவு செய்யவும் தெரியாது. எதாவது கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்றுதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு கூடுதல் பணம் விரயமாகும். கஷ்டப்பட்டு பதிவு செய்தாலும், நீங்கள் எங்களது செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அதை எங்களுக்கு வாசிக்க தெரியாது. எனவே பழைய முறையான சீட்டு கொடுத்து மணல் அள்ளும் முறையில் மணல் குவாரியை இயக்க வேண்டும் என்று கூறி குவாரியில் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் சென்று முறையிடுங்கள். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தனர். இதையேற்ற தொழிலாளர்கள், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து பேசினர்.

அப்போது சப்-கலெக்டர் பிரசாந்த், ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படும். இதையும் மீறி மணல் அள்ளினால் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும். மணல் அள்ளும் தொழிலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள், அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story