பண்ருட்டி அருகே ஸ்கூட்டி மீது கார் மோதல்; 2 விவசாயிகள் பலி


பண்ருட்டி அருகே ஸ்கூட்டி மீது கார் மோதல்; 2 விவசாயிகள் பலி
x
தினத்தந்தி 8 Jan 2019 4:00 AM IST (Updated: 8 Jan 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ஸ்கூட்டி மீது கார் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் பலியானார்கள்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 55). இவருடைய உறவினர் ஜெயச்சந்திரன்(35). இருவரும் விவசாயிகள். சொந்த வேலை காரணமாக இருவரும் ஸ்கூட்டியில் காட்டாண்டிக்குப்பத்துக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்ததும் அதே ஸ்கூட்டியில் காடாம்புலியூர் நோக்கி புறப்பட்டனர். காட்டாண்டிக்குப்பம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார், ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் கார், நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. ஸ்கூட்டி அப்பளம்போல் நொறுங்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். சபரிராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெயச்சந்திரனை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து 2 பேரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இதனிடையே விபத்துக்குள்ளான காரையும், ஸ்கூட்டியையும் போலீசார் மீட்டு, காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story