வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை கொல்ல முயற்சி: கள்ளக்காதலன், மனைவி உள்பட 6 பேர் கைது


வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை கொல்ல முயற்சி: கள்ளக்காதலன், மனைவி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:11 PM GMT (Updated: 7 Jan 2019 10:11 PM GMT)

பெங்களூருவில் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை கொல்ல முயன்ற வழக்கில் கள்ளக்காதலன், மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படைக்கு ரூ.1½ லட்சத்திற்கான நகைகளை அவரது மனைவி கொடுத்ததும் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரகெரே, பி.டி.எஸ். லே-அவுட்டில் வசித்து வருபவர் நாகராஜ், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மமதா. இந்த நிலையில், கடந்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி தனது மனைவியுடன் நாகராஜ் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 4 மர்மநபர்கள் நாகராஜை அடித்து, உதைத்தும், ஆயுதங்களால் தாக்கியும் கொல்ல முயன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த 40 கிராம் தங்க சங்கிலி, மனைவி மமதாவின் கையில் அணிந்திருந்த 2 தங்க மோதிரங்கள், விலை உயர்ந்த செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து உளிமாவு போலீசில் நாகராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். பின்னர் டிசம்பர் 18-ந் தேதி அதே உளிமாவு போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று கூறி நாகராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதில், டிசம்பர் 15-ந் தேதி காலையில் வேலைக்கு சென்ற தனது மனைவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும், அவரை கண்டுப்பிடித்து கொடுக்கும்படியும் அவர் கூறி இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மனைவி கைது

அப்போது நாகராஜ் வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் பிரசாந்துடன் மமதாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனால் அவருடன் ஓடிப்போனதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரசாந்த், மமதா ஆகியோரை பிடித்து உளிமாவு போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தது. அதாவது தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த நாகராஜை கொலை செய்ய கூலிப்படையினரை 2 பேரும் ஏவி விட்டதும், இதற்காக ரூ.1½ லட்சத்திற்கு தங்க நகைகளை கூலிப் படையினருக்கு மமதா கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, நாகராஜின் மனைவி மமதா(வயது 28), கள்ளக்காதலன் பிரசாந்த்(21), கூலிப்படையை சேர்ந்த அனில் பிஸ்வாஸ்(21), ஹரீஷ்குமார்(20), ஜாகிர் பாட்ஷா(21) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால்...

அப்போது பிரசாந்த் வீட்டில் நாகராஜ் வாடகைக்கு வசித்ததால், பிரசாந்துடன் மமதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் நாகராஜ் வேலைக்கு சென்ற பின்பு தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி நாகராஜுக்கு தெரியவந்ததும், மமதாவை கண்டித்துள்ளார். இதனால் தனது கணவர் உயிருடன் இருந்தால், பிரசாந்துடன் உள்ள கள்ளத்தொடர்பை தொடர முடியாது என்று மமதா கருதியுள்ளார். இதுபற்றி பிரசாந்திடம் மமதா கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து கூலிப் படையை ஏவி நாகராஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த அனில் பிஸ்வாஸ், ஹரீஷ்குமார், ஜாகிர் பாட்ஷாவிடம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி ரூ.1½ லட்சத்திற்கு தன்னுடைய நகைகளை மமதா கொடுத்துள்ளார். அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி வீடு புகுந்து நாகராஜை அனில் பிஸ்வாஸ் உள்பட 4 பேர் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் நாகராஜ் வீட்டுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்ய 2 பேர் வந்ததால், கொலை முயற்சியை கைவிட்டு விட்டு நாகராஜிடம் இருந்த நகை, செல்போனை 4 பேரும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கைதான 6 பேரிடம் இருந்து தங்க நகைகள், ஒரு கார், மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 6 பேர் மீதும் உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story