போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயற்சி பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்


போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயற்சி பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்
x
தினத்தந்தி 8 Jan 2019 3:43 AM IST (Updated: 8 Jan 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு வினோபா நகரை சேர்ந்தவர் தபரேஷ்(வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது கே.ஜி.ஹள்ளி, கே.ஆர்.புரம், ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ரவுடி தபரேஷ் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய கோர்ட்டும் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கே.ஜி.ஹள்ளி பகுதியில் தபரேஷ் நிற்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வின் பிரதீப்புக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு போலீஸ்காரர்களுடன் விரைந்து சென்றார். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் ரவுடி தபரேஷ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு பின்பகுதியில் ரவுடி தபரேஷ் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் எட்வின் பிரதீப்புக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், சக போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு பதுங்கி இருந்த ரவுடி தபரேசை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அவரை பிடிக்க போலீஸ்காரர் சிவக்குமார் முயன்றார். ஆனால் தபரேஷ் தன்னிடம் இருந்த கத்தியால் சிவக்குமாரை குத்தினார். இதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரவுடியை சுட்டுப்பிடித்தனர்

இதையடுத்து, வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு, தபரேசை சரண் அடையும்படி இன்ஸ்பெக்டர்் எட்வின் பிரதீப் எச்சரித்தார். ஆனால் அவர், இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடவும் முயற்சித்தார். உடனே இன்ஸ்பெக்டர் எட்வின் பிரதீப் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி தபரேசை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், தபரேசின் காலில் ஒரு குண்டும், மற்றொரு குண்டு கையிலும் துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.

உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள். பின்னர் ரவுடி தபரேஷ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர் களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி அறிந்ததும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல் குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பரபரப்பு

பின்னர் துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெங்களூரு விேனாபாநகரை சேர்ந்த ரவுடி தபரேஷ் மீது மொத்தம் 14 வழக்குகள் உள்ளன. கே.ஆர்.புரம், ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையங்களில் தபரேஷ் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மீது 11 பிடிவாரண்டுகளை கோர்ட்டு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இன்று (அதாவது நேற்று) ரவுடி தபரேஷ், கே.ஜி.ஹள்ளி போலீஸ்காரர் சிவக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கியால் சுட்டு இன்ஸ்ெபக்டர் எட்வின் பிரதீப், அவரை கைது செய்துள்ளார். கைதான தபரேசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story