பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து கோலாருக்கு கொண்டு செல்லும் கே.சி.வேலி நீர் திட்டத்திற்கு தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து கோலாருக்கு கொண்டு செல்லும் கே.சி.வேலி நீர் திட்டத்திற்கு தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jan 2019 3:47 AM IST (Updated: 8 Jan 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து கோலாருக்கு கொண்டு செல்லும் கே.சி.வேலி நீர் திட்டத்திற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோலார் தங்கவயல்,

பெங்களூருவில் சேரும் கழிவு நீரை சுத்திகரித்து, கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 126 ஏரிகளுக்கு நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.வேலி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. குழாய் மூலம் அந்த நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த குழாயில், சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாததால் கழிவுநீர் வந்தது. அந்த நீரின் நிறமும் கருப்பாக இருந்தது. இதனால் அந்த மாவட்டங்களின் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அந்த நீர் கொண்டு வருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஐகோர்ட்டு தடை

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, கோலார் தாலுகா நரசாப்பூர் அருகே லட்சுமி சாகரா ஏரியில் நிரப்பப்பட்டது. இந்த நிலையில் கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிரந்தர குடிநீர் போராட்ட கமிட்டி தலைவர் ஆஞ்சனேயரெட்டி, பெங்களூருவில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அசுத்த நீரை ஏரிகளுக்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசடைகிறது. கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி கே.சி.வேலி நீர் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவின்படி லட்சுமி சாகரா ஏரியில் தண்ணீரை ஆய்வு செய்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இதனால் பெங்களூருவில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆஞ்சனேயரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தடை

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அதாவது பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து கோலாருக்கு கொண்டு செல்லும் கே.சி.வேலி நீர் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு ேநாட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story