மந்திரி புட்டரங்கஷெட்டி பதவி விலக வலியுறுத்தி சாம்ராஜ்நகரில், பா.ஜனதாவினர் சாலை மறியல்


மந்திரி புட்டரங்கஷெட்டி பதவி விலக வலியுறுத்தி சாம்ராஜ்நகரில், பா.ஜனதாவினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2019 3:50 AM IST (Updated: 8 Jan 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி புட்டரங்கஷெட்டி பதவி விலக வலியுறுத்தி சாம்ராஜ்நகரில், பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கொள்ளேகால்,

கா்நாடக கூட்டணி அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் புட்டரங்கஷெட்டி. இவர் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் உள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் உரிய ஆவணங்கள் இன்றி மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலக ஊழியர் மோகன் எடுத்து சென்ற ரூ.25.80 லட்சத்தை விதான சவுதா போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோகனையும் கைது செய்தனர். அந்த பணம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மோகன் வாங்கியதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மந்திரி புட்டரங்கஷெட்டி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அலுவலக ஊழியரிடம் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக மந்திரி புட்டரங்கஷெட்டி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சாம்ராஜ்நகர் டவுன் புவனேஸ்வரி சர்க்கிளில் பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது மந்திரி புட்டரங்கஷெட்டி பதவி விலக வலியுறுத்தியும், கூட்டணி அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story