ஊதியூர் தனியார் பால் பண்ணைக்கு ஆதரவாக தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


ஊதியூர் தனியார் பால் பண்ணைக்கு ஆதரவாக தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:45 AM IST (Updated: 8 Jan 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஊதியூரில் அமைக்கப்படும் தனியார் பால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்து, தாராபுரத்தில் விவசாயிகள் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், ஊதியூர் பகுதியில் தனியார் பால் நிறுவனம் ஒன்று, பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைப்பதற்காக கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை அமைக்கும் இடமானது, ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டக்கூடாது என்றும் சிலர் போராட்டங்களை நடத்தினார்கள்.

இதன் காரணமாக பால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊதியூர், தாயம்பாளையம், முதலிபாளையம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள், தனியார் பால்பண்ணைக்கு விற்பனை செய்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது இல்லை. தொழிற்சாலை கட்டுவதை தடுத்து நிறுத்துவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–

ஊதியூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மிகவும் வறட்சியான பகுதிகள், விவசாயம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனம் ஊதியூர் பகுதியில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க நிலம் வாங்கியது. அப்பகுதி விவசாயிகள் பலர் தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களை, தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்கள். தற்போது அந்த நிலத்தில் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெளியூரைச்சேர்ந்த சிலர் இங்கு வந்து, தனியார் பால் நிறுவனம் அமைக்கும் இடம், உத்தண்ட வேலாயுத சாமி கோவிலுக்குச் சொந்தமான இடம் என்று கூறி, அந்த இடத்தில் தொழிற்சாலை கட்டுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நடவடிக்கையால் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் விவசாயிகளின் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த தொழிற்சாலை அமைந்தால், இங்குள்ள சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகளின் கால்நடை வளர்ப்பு மேம்படும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனவே தனியார் நிலத்தை கோவில் நிலம் என்று தவறான பிரசாரம் செய்து, தனியார் தொழிற்சாலை அமைவதை தடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் நபர்கள் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.

தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாததால், பிறகு ஒரு நாள் வந்து கோரிக்கை மனுவை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story