கோண்டியாவில் தாயை பிரிந்து தவித்த சிறுத்தைப்புலி குட்டியை துன்புறுத்திய இளைஞர்கள் வீடியோ வெளியாகி பரபரப்பு
கோண்டியாவில் தாயை பிரிந்து தவித்த சிறுத்தைப்புலி குட்டியை வாலிபர்கள் துன்புறுத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூர்,
கோண்டியா வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 2 சிறுத்தைப்புலி குட்டிகள் தாயை பிரிந்து வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டன. இதில், ஒரு சிறுத்தைப்புலி குட்டி கோய்லாரி கிராம பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே தவித்து கொண்டிருந்தது.
இதுபற்றி அறிந்ததும் அந்த கிராமவாசிகள் அங்கு திரண்டு விட்டனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உடனடியாக அங்கு வரவில்லை.
2 மணி நேரத்திற்கு பிறகு வந்து தான் சிறுத்தைப்புலி குட்டியை மீட்டு இருக்கின்றனர். அந்த 2 மணி நேரத்தில் கிராமவாசிகளால் அந்த சிறுத்தைப்புலி குட்டி சொல்லணா துயரத்தை அனுபவித்து விட்டது.
துன்புறுத்திய வாலிபர்கள்
வேடிக்கை பார்க்க திரண்டிருந்தவர்களில் 3 பேர் ஈவு, இரக்கமில்லாமல் அந்த சிறுத்தைப்புலி குட்டியை துன்புறுத்தி பாடாய்படுத்தி உள்ளனர். சிறுத்தைப்புலி குட்டிக்கு நேர்ந்த இந்த துயரத்தை செல்போனில் ஒருவர் பதிவு செய்துள்ளார். அந்த காட்சியில், தாயின் அரவணைப்பில் இருந்து தவறிய அந்த சிறுத்தைப்புலி ஒரு மரத்தடியில் பசியால் சோர்ந்து கிடக்கிறது.
வாலிபர் ஒருவர் சற்றும் இரக்கமின்றி அந்த சிறுத்தைப்புலி குட்டியின் வாலை பிடித்து தரையில் தரதரவென இழுத்து செல்கிறார். பின்னர் அவர் அதை சுழற்றி வீசுகிறார்.
இதில், அந்த குட்டி தரையில் சென்று வேகமாக விழுகிறது. அத்துடன் இந்த கொடுமை நின்றுவிடவில்லை. மேலும் 2 பேர் அந்த சிறுத்தைப்புலி குட்டியின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்துகின்றனர். கற்களையும் அதன் மீது வீசியுள் ளனர்.
3 பேர் மீதும்...
இதனால் வேதனை தாங்க முடியாமல் அது துடிக்கிறது. இதுதவிர அவர்கள் அந்த குட்டியுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கின்றனர். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தைப்புலி குட்டி தாக்கப்படும் இந்த வீடியோ, விலங்குநல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மீட்கப்பட்ட அந்த சிறுத்தைப்புலி குட்டி சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த சிறுத்தைப்புலி குட்டியை துன்புறுத்தியவர்கள் பெயர் லோகேஷ், பிரகாஷ், ஆசிப் சேக் என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 3 பேர் மீதும் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தநிலையில், தாயை பிரிந்த மற்றொரு சிறுத்தைப்புலி குட்டியும் நேற்று அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story