மந்திராலயா மாடியில் இருந்து பாதுகாப்பு வலையில் குதித்த வாலிபரால் பரபரப்பு
மந்திராலயா மாடியில் இருந்து அங்குள்ள பாதுகாப்பு வலையில் குதித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் அமைந்துள்ளது. மாநில அரசின் அலுவல்கள் நடைபெறும் இந்த கட்டிட வளாகம் தற்கொலை களமாக மாறி வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் தர்மா பாட்டீல் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல் ஹர்ஷல் ராவ்தே என்பவர் மந்திராலயா கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாடியில் இருந்து குதித்தார்
இதையடுத்து, மந்திராலயா கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மந்திராலயாவிற்கு வந்திருந்த ஒருவர், 3-வது மாடியில் இருந்து மந்திராலயா வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள பாதுகாப்பு வலையில் குதித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் குதித்துவிட்டார் என அனைவரும் கருதினர். இந்தநிலையில், அந்த வாலிபர் மராட்டியத்தை பெண் முதல்-மந்திரி ஆளவேண்டும், மாநிலத்தில் நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும், தனக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அந்த வாலிபரை பாதுகாப்பு வலையில் இருந்து கீழே இறக்கினார்கள். பின்னர் அவர் மெரின்டிரைவ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் புனேயை சேர்ந்த லட்சுமண் சவான் என்பது தெரியவந்தது. அவர் பாரத் பிரஜா சட்டா என்ற அமைப்பை நடத்தி வருவது தெரியவந்தது.
முதல்-மந்திரி அல்லது வேறு ஏதேனும் மந்திரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்த தன்னை சந்திக்க விடாமல் போலீசார் மற்றும் அதிகாரிகள் தடுத்ததால் பாதுகாப்பு வலையத்தில் குதித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story