காப்பகத்தில் தங்கியுள்ள 3 திரிபுரா சிறுவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை; கலெக்டர் தகவல்
மதுரை காப்பகத்தில் தங்கியுள்ள 3 திரிபுரா சிறுவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
மதுரை,
திரிபுரா மாநிலம் பதயப்பூர் பகுதியை சேர்ந்தவர் முனிராம். இவருடைய மனைவி சோம்பர்த்தி. இவர்களுக்கு சோப்ரதி (வயது 16), மால்ருங் (13), நேரு (9) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்தது. இதனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த முனிராம், உறவினர் ஒருவரது உதவி மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ரீச் பள்ளியில் மகன்களை சேர்த்தார். அவர்கள் தொடர்ந்து அங்கு தங்கி படித்தனர். இதற்கிடையே அந்த பள்ளி முறையான அனுமதி பெறவில்லை என்ற காரணத்தால் கடந்த ஆண்டு மூடப்பட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த 3 திரிபுரா சிறுவர்களும் சக்தி விடியல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தி, அந்த 3 சிறுவர்களும் திரிபுரா மாநில அரசின் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இதற்கிடையில் 3 திரிபுரா சிறுவர்களும் நேற்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் நடராஜனை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு கலெக்டர், புத்தாடைகள் வழங்கினார். அப்போது குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜய் சரவணன், சண்முகம், சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, 3 திரிபுரா சிறுவர்களும், அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல உள்ளனர். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாட்டின் பேரில் உரிய போலீஸ் பாதுகாப்புடன் குழந்தைகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, பராமரிப்பை வழங்குவதற்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், மதுரை மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்களை பார்வையிட்டு சிறுவர்களுக்கு தேவையான வசதிகள் இருக்கிறதா என்பதனை உறுதி செய்வார்கள். பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் தேவைப்படுவோர் மதுரை அழகப்பன் நகரில் உள்ள முத்துப்பட்டி, கென்னட் நகரில் செயல்படும் குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.