கொட்டாம்பட்டி அருகே சமூக விரோதிகளின் கூடாரமான பஞ்சபாண்டவர் மலை சிதிலமடையும் மூலிகை ஓவியம், வரலாற்று சின்னங்கள்
கொட்டாம்பட்டி அருகே சமணர் வசித்த பஞ்சபாண்டவர் மலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, அங்குள்ள வரலாற்று சின்னங்கள், மூலிகை ஓவியங்கள் சிதலமடைந்து வருகிறது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே மதுரை–திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது, கருங்காலக்குடி. இந்த ஊரை சுற்றி 10–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆங்காங்கே சிறிய குன்று, மலைகள் உள்ளன. கருங்காலக்குடியில் 5 மலை குன்றுகளை கொண்ட பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இந்த மலை பகுதிகள் கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த பஞ்சபாண்டவர் மலை என்றும், 9–ம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகள் இந்த மலை பகுதிக்கு வந்து, அங்கு வசித்து தவம் செய்துள்ளனர் என்றும் வரலாறு கூறுகிறது.
இதற்கு அடையாளமாக சமண தீர்த்தங்கரர் சிற்பம் மலையில் வடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதன் அருகே பிராமி எழுத்துகள், வட்டெழுத்துகள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டுள்ளன. இது பஞ்சபாண்டவர் குட்டு, சமண துறவிகளின் உறைவிடமாக இந்த மலை திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் மலையில் வரையப்பட்டுள்ள அழகிய மூலிகை ஓவியங்கள், கல்வெட்டுகள், வட்டெழுத்துகள் உள்ளிட்டவை மீது சமூக விரோதிகள் சிலர் பெயிண்டால் அழித்தும், பெயர்களை எழுதியும் செல்வதால் பண்டைய நாகரிகத்தை உணர்த்தும் தடயங்கள் அழியும் நிலை உள்ளது. மேலும் தற்போது மீதமிருக்கும் அரியவகை சமண பொக்கிஷங்கள், வரலாற்று சின்னங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இப்பகுதியை மேலும் சிலர் இரவு, பகலாக மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் மதுபாட்டில்களை பாறை பகுதியிலேயே உடைத்தும், பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசியும் செல்கின்றனர். சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வரலாற்றை அறிந்து கொள்வதற்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே சமூக விரோதிகளின் பிடியில் உள்ள பஞ்சபாண்டவர் மலையை மீட்டு, வரலாற்று சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறையினருடன் இணைந்து போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருங்காலக்குடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.