தனியார் விமானதள திட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் தனியார் விமானதள திட்ட அனுமதியை உடனே ரத்து செய்யக்கோரி கைகளில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த நெடுங்காடு தொண்டைமண்டலம், புத்தகுடி, பொன்பேத்தி, கிளியனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து, தனியார் விமானதளத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், இத்திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தியும் கிராம மக்கள் நேற்று தங்களது வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டை மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் முடிவில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு விவசாய நிலங்களை தூர்க்கவோ, அழிக்கவோ கூடாது என்று சட்டத்தை நிறைவேற்றி விட்டு, தற்போது நெடுங்காடு பகுதியில் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்களை அழித்து தனியார் விமானதளம் கொண்டு வருவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
நெடுங்காடு தொகுதியில் விமானநிலையம் தேவையில்லை என ஒட்டுமொத்த கிராமமே எதிர்க்கும் நிலையில், இதுகுறித்து புகார்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் புதுச்சேரி அரசுக்கு பலமுறை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் விமானதளம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் தனியார் விமானதளம் மூலம் நெடுங்காடு தொகுதியில் காலங்காலமாக உள்ள விவசாயத்தை அழித்து, வரலாற்றில் மிகப்பெரிய அழிவை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவேண்டாம். காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து, உடனே தனியார் விமானதளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை நெடுங்காடு தொகுதி கிராமமக்கள் புறக்கணிப்போம். தனியார் விமானதள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் தைப்பொங்கலை கருப்பு பொங்கலாக அறிவித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story