கண்ணமங்கலம் அருகே மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கண்ணமங்கலம் அருகே மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட் ரேணுகாம்பாள் நகரை சேர்ந்தவர் அமிர்தம்மாள் (வயது 70). இவர் கடந்த 6–ந் தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு ஊட்டியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். பின்னர் நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் நகைகளை மர்ம நபர்ள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.