தீர்க்கப்படாத குறைகளுக்கு அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று பதில் அளிக்கப்படும் உதவி கலெக்டர் உறுதி
விவசாயிகளின் தீர்க்கப்படாத குறைகளுக்கு அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று நாங்களே பதில் அளிப்போம் என்று உதவி கலெக்டர் உறுதி அளித்தார்.
ஆரணி,
ஆரணி, பழைய தாலுகா அலுவலகம் எதிரே உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. ஆரணி உதவி கலெக்டர் மைதிலி தலைமை தாங்கினார். தாசில்தார் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் வரவேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயி ஒருவர் கேவலமாக பேசியதால் அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியே நின்றிருந்தனர். அப்போது உதவி கலெக்டர் விவசாயிகளிடம் பேசியதாவது:–
உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாக தெரிவியுங்கள், கூட்டத்தில் அதிகாரிகளை அவதூறாக பேசாதீர்கள்.
இந்த கூட்டத்தில் மனு கொடுத்தால் அடுத்த கூட்டத்திற்குள் குறைகள் தீர்க்கப்படும், தீர்க்கப்படாத குறைகளுக்கான அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று நாங்களே பதில் அளிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து வெளியே நின்றிருந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு அலுவலர், கடந்த கூட்டத்தில் அவதூறாக பேசிய விவசாயி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அதற்கு ஒரு விவசாயி ஒருமையில் பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் பேசுகையில், கடந்த கூட்டத்தில் பிரச்சினை செய்த விவசாயிக்கு தகவல் தரவில்லை. அதனால் அவர் வரவில்லை என்றார். அதற்கு அரசு அலுவலர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விவசாயியும் பல்வேறு விதமாக கேள்விகள் கேட்பார்கள் பிரச்சினை ஏற்படும்போது அவருக்கு தகவல் தரவில்லை எனக்கூறி சமாளிக்கிறீர்கள் என்றார்.
அதற்கு உதவி கலெக்டர் பதிலளிக்கையில், இனி அதுபோன்ற பிரச்சினைகள் வராது, எந்தவொரு பிரச்சினையும் புகார்தான் தரவேண்டும். வாய் சொல் பேசக்கூடாது என்றார்.
அப்போது விவசாயிகள் பெரும்பாலான அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார். இன்று ஒருசில அலுவலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் வரவில்லை, உங்களுடைய குறைகளை சொல்லுங்கள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உதவி கலெக்டர் கூறினார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக வழங்கி பேசினார்கள்.