திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் கல்வி மாவட்ட அளவிலான கலையருவி விழா


திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் கல்வி மாவட்ட அளவிலான கலையருவி விழா
x
தினத்தந்தி 9 Jan 2019 3:30 AM IST (Updated: 8 Jan 2019 10:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் கல்வி மாவட்ட அளவிலான கலையருவி விழா நடந்தது.

திருவண்ணாமலை,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான கலையருவி விழா திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரேணுகோபால், பள்ளிகளின் துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் குழு நடனம், தனி நடனம், பேச்சுப்போட்டி, வில்லுப்பாட்டு, தனிப்பாடல், ஓவிய போட்டி, நாடகம், களிமண்ணில் சிலை செய்வது என பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் 65 பள்ளியை சேர்ந்த 460 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பங்கு கொண்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டினர். தலைமை ஆசிரியர்கள் துரைராஜ், வீரமணி, வெற்றிவேல், ஜெயராஜ்சாமுவேல் ஆகியோர் போட்டிகளை மேற்பார்வையிட்டனர்.

ஏற்பாடுகளை கலையருவி விழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், சுமித்ரா ஆகியோர் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

போளூர் கல்வி மாவட்ட அளவிலும் கலையருவி விழா நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.மகாவீர்சந்த் ஜெயின் முன்னிலை வகித்தார். ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி வரவேற்றார்.

போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், தலைமை ஆசிரியர்கள் மதிவாணன், பெருமாள், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற போட்டிகளில் 1,004 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 6 முதல் 8-ம் வகுப்பு, 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு, 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் பள்ளித் துணை ஆய்வாளர் தன்ராஜ் நன்றி கூறினார். இதில் மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலையருவி விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பி.அசோகன் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் பி.பாபு, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கேசவன், பி.மாலவன், டி.கலைபாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ந.சுமித்ராதேவி, எம்.சிவராமன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சுடர்கொடி, பள்ளி நிர்வாக முன்னாள் தலைவர் வி.டி.எஸ்.சங்கரன், தாளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை எஸ்.மகேஸ்வரி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பி.அசோகன் பரிசுகளை வழங்கினார். இப்போட்டி இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக நடைபெறும். இதில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story