அனைத்து மகளிர் போலீசார் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்
அனைத்து மகளிர் போலீசார் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
தேனி,
தேனி மாவட்டம் முழுவதும் குடியிருப்புகள், சுற்றுலா தலங்கள், பெண்கள் விடுதிகள், மாணவிகள் விடுதிகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மகளிர் போலீசார் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வைகை அணை, சுருளி அருவி உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று அனைத்து மகளிர் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றனர்.
அதன்படி வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை போலீசார் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறும்போது, இளம்வயது திருமணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்த பகுதிகளில் அனைத்து மகளிர் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், குழந்தைகள் காப்பகங்களுக்கும் நேரில் சென்று ‘போக்சோ’ சட்டம், ‘காவலன்’ செயலி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையில் முறையான அரவணைப்பு மற்றும் அறிவுரை கிடைக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்துகளும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணப் போக்கை மாற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story