கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2019 10:30 PM GMT (Updated: 8 Jan 2019 5:07 PM GMT)

பாரூர் அருகே கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அருகே உள்ள நாகர்குட்டை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவள்ளுவர் தினத்தன்று கிராம மக்கள் ஒன்று கூடி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு படையல் வைத்து அன்னதானம் செய்வது வழக்கம். தொடர்ந்து கோவிலின் தேர்த்திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருவார்.

இந்தநிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் தேர் பவனி வரும் இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் வருவாய்த்துறையில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நில அளவையாளர் பன்பரசு மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கோவில் நிலத்தையும், கோவிலை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தையும் அளவீடு செய்து வந்தனர்.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த குடும்பத்தினர் நில அளவீடு செய்ய எதிர்ப்பு செய்ததாக கூறப்படுகிறது இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என பாரூர்-செல்லம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், போச்சம்பள்ளி துணை தாசில்தார் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் ராஜாகண்ணு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் இரு தரப்பினரையும் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளவும் போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத் உத்தரவிட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

Next Story