தூத்துக்குடி-கோவில்பட்டியில் 5 இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


தூத்துக்குடி-கோவில்பட்டியில் 5 இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 8 Jan 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிற்சங்கத்தினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 11 தொழிற்சங்கத்தினர் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் தலைமை தாங்கினார். எல்.பி.எப். துணை தலைவர் முருகன், மரியதாஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் அகில இந்திய இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் சங்கம் சார்பில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் 22 பெண்கள் உள்பட 47 பேர் கலந்து கொண்டு, கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அலுவலக வளாகத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ரசல் தலைமை தாங்கினார். இதில் ஒரு பெண் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மின்வாரிய அலுவலத்தில் பணியாற்றும் 350 ஊழியர்களில் நேற்று 145 பேர் பணிக்கு செல்லவில்லை. கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 87 ஊழியர்களில் 10 பேர் பணிக்கு செல்லவில்லை. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பணிக்கு வந்தனர்.

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 58 ஊழியர்களில் 46 பேர் பணிக்கு வரவில்லை. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. சில வெளியூர்களுக்கு நீண்ட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவில்பட்டி தபால் துறை கோட்டத்தில் உள்ள துணை தபால் நிலையங்களில் பணியாற்றும் 229 ஊழியர்களில் 220 பேர் பணிக்கு செல்லவில்லை. இதேபோன்று கிளை தபால் நிலையங்களில் பணியாற்றும் 574 ஊழியர்களில் 474 பேர் பணிக்கு செல்லவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

கோவில்பட்டி எல்.ஐ.சி. அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. கோவில்பட்டி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பும் தபால் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Next Story