ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் என்று கூறி நோயாளியிடம் பணம் பறிப்பு திருத்தணியை சேர்ந்த இளம்பெண் கைது


ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் என்று கூறி நோயாளியிடம் பணம் பறிப்பு திருத்தணியை சேர்ந்த இளம்பெண் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 3:45 AM IST (Updated: 8 Jan 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் என்று கூறி நோயாளியிடம் பணம் பறிப்பு திருத்தணியை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 63). இவர் தனது மகன் ராமலிங்கத்துக்கு(34) உடல்நிலை சரி இல்லாததால் கடந்த மாதம் 28-ந் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்போது மருத்துவமனையில் டாக்டர் சீருடையில் இருந்த இளம்பெண் ஒருவர் ராமலிங்கத்தை சோதித்து பின்னர் அவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.800 செலுத்த வேண்டும் என்று கூறி லட்சுமியிடமிருந்து பணத்தை பெற்றுச் சென்றார்.

பின்னர் அந்த இளம்பெண்ணை அங்கு காணவில்லை. இதையடுத்து லட்சுமி அங்கிருந்த டாக்டர் ரமேஷ் என்பவரிடம் இது குறித்து புகார் செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் டாக்டர் என கூறி பணம் பரித்த இளம்பெண் அந்த வழியாக டாக்டர் உடையில் செல்வதை கண்ட லட்சுமி, அந்த இளம்பெண்ணை பிடித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருத்தணியை அடுத்த மணவூர் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா(26) என்பதும், அவர் டாக்டர் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் ஷர்மிளா தன்னை டாக்டர் என கூறி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.

Next Story