கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மருந்து வணிகர்கள் முற்றுகை ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து மருந்து வணிகர்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பகுதியில் உள்ள மருந்து வணிகர்கள் நேற்று காலையில் கடைகளை அடைத்து விட்டு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதித்தால் பொதுமக்களுக்கும், மருந்து வணிகர்களுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் ஜான் பிரிட்டோ, ஒருங்கிணைப்பு செயலாளர் ரோகிணி, தாலுகா தலைவர் கதிரேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் சந்திரகண்ணன், பொருளாளர் ராமசாமி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜ், கார்த்திகேயன் உள்பட திரளான மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர். மருந்து வணிகர்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.