தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் விவகாரம்: சட்டவிதிகளுக்கு முரணாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஜோயல் குற்றச்சாட்டு
தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதித்த பசுமைதீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சட்டவிதிகளுக்கு முரணாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளதாக, தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு முறைகேடாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
தி.மு.க. சார்பில் இதற்கு தடை விதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தாமிபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கக்கூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சட்ட விதிமுறைகளின்படி மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையிலும் உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி, மேல்முறையீடு செய்துள்ளது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு வருகிற 11-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். நாங்கள் இறுதி வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story