தஞ்சையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரேஷன்கடைகளில் குவிந்த பொதுமக்கள்


தஞ்சையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரேஷன்கடைகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 6:49 PM GMT)

தஞ்சையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரேஷன்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.

தஞ்சாவூர்,

பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தை அறிவித்து வழங்கி வருகிறது.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி பருப்பு, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் 6-ந் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 7-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு 1,185 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 51 அயிரத்து 628 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பல கடைகளுக்கு 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை வாங்குவதற்காக ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க ஒரு நாளைக்கு 100 அல்லது 150 குடும்ப அட்டைகள் என பிரித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஒரு சில கடைகளில் அறிவிப்புகள் இல்லாததால் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வாங்குவதற்காக மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தஞ்சையில் நேற்று பல கடைகளில் மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வாங்குவதற்காக குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச்சென்றனர். 

Next Story