கர்நாடகாவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி
கர்நாடகாவில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக பெங்களூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
ஓசூர்,
அகில இந்திய அளவில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல கர்நாடகாவிலும் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப் பட்டது.
போராட்டத்தின் முதல் நாளான நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நேற்று இயக்கப்படவில்லை. இவை ஓசூர் பஸ் நிலையம் மற்றும் பணிமனை களில் நிறுத்தப்பட்டன.
அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் பகுதிகளுக்கு வந்து செல்லும் கர்நாடக அரசு பஸ்களும் நேற்று இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் ஆனேக்கல் பணிமனை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, நாள்தோறும் ஓசூரில் இருந்து பெங்களூரு சென்று வரும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வெளியூர் பயணிகள் ஓசூர் பஸ் நிலையத்தில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பஸ்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக தொகை கொடுத்து பெங்களூரு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்நாடக அரசு பஸ்கள் நேற்று இயக்கப்படாததால், ஓசூர் பஸ் நிலையத்தில், கர்நாடக அரசு பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில், ஓசூரில் இருந்து கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி எல்லை வரை, டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அவை அத்திப்பள்ளி நகரத்திற்குள் செல்லாமல், எல்லையில் உள்ள ஜூஜூவாடி நினைவு வளைவு வரை சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டும், இறக்கி விடும் வகையிலும் நாள் முழுவதும் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப் பட்டது.
Related Tags :
Next Story