சீர்காழி அருகே கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி அடித்துக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சீர்காழி அருகே கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி அடித்துக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM IST (Updated: 9 Jan 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளியை அடித்துக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே நத்தம் கிராமம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெரியநாயகம்(வயது 55). திருமணமாகாத இவர், அதே பகுதியில் மயிலாடுதுறை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெரியநாயகம் பணியில் இருந்தார். அப்போது பள்ளியின் அருகே உள்ள தூய அந்தோணியார் ஆலயத்தில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினர். இதனை கண்ட பெரியநாயகம், மர்ம நபர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அங்கு கிடந்த விறகு கட்டையால் பெரியநாயகத்தை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய நாயகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியை அடித்து கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story