வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தடியடி- பதற்றம்


வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தடியடி- பதற்றம்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:30 PM GMT (Updated: 8 Jan 2019 6:55 PM GMT)

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதை தடுக்க சென்ற போலீசார் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் எருதுகளை ஓடவிட்டு, அதன் பின்தொடர்ந்து ஓடுவதும், எருதுகளின் தலையில் உள்ள வண்ண பதாகைகளை பறிக்க ஓடுவதும் என விழா நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எருது விடும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெறுவதாக கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல் துறையிடம் முன் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் எருது விடும் விழாவிற்காக வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றி உள்ள நாச்சிகுப்பம், சூளகிரி, பேரிகை, குந்தாரப்பள்ளி, ஆவல்நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் அழைத்து வரப்பட்டன. அதேபோல அருகில் உள்ள கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். சுமார் 300 காளைகள் இந்த விழாவிற்காக அழைத்து வரப்பட்டன. மேலும் விழாவை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இங்கு எருது விடும் விழா நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே விழா நடத்த கூடாது என்று கூறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.

ஆனால் இளைஞர்களோ செல்ல மறுத்து போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். இந்த சம்பவம் காரணமாக வேப்பனப்பள்ளி அருகே பெரும் பதற்றமாக காணப்பட்டது.

கடந்த ஆண்டும் இந்த பகுதியில் இதே போல எருது விடும் விழாவின் போது மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story