கோவையில் ரூ.98 லட்சம் நகை கொள்ளை: ஹவாலா கும்பல் கைவரிசையா?
ரூ.98 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், ஹவாலா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.நகைகளுடன் கடத்திச்சென்ற காரை கோவை அருகே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கேரள மாநிலம் திருச்சூரில் பிரபல நகைக்கடையான கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளது. இங்கிருந்து கோவை 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜுவல்லரிக்கு அர்ஜூன்(22), வில்பர்ட்(31) ஆகிய ஊழியர்கள் நேற்று முன்தினம் ஒரு காரில் ரூ.98 லட்சம் மதிப்புள்ள 350 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி நகைகளை கொண்டு வந்தனர்.
கேரள-தமிழக எல்லையான கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கார் வந்த போது, பின்னால் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நகைக்கடைக்கு சொந்தமான கார் மீது மோதி குறுக்கே நிறுத்தியது. உடனே அந்த கும்பல் நகைக்கடை ஊழியர்களை மிரட்டி காரில் இருந்து வெளியேற்றி விட்டு, தங்க நகைகள் இருந்த காரை நகைகளுடன் கடத்திக் கொண்டு தப்பிச்சென்றது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் ஓட்டல்கள் இருந்தன. அவற்றின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையர்கள் 2 கார்களில் வந்து நகைக்கடை ஊழியர்களின் காரின் குறுக்கே நிறுத்தும் காட்சிகள் தெரிந்தது. அதில் கொள்ளையர்கள் வந்த ஒரு காரின் எண் மூலம் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே ஒரு தனிப்படையினர் கோவையில் இருந்து கேரளா செல்லும் பாதைகளான வாளையார், வேலந்தாவளம், கொழிஞ்சாம்பாறை பகுதிகளில் சோதனை சாவடிகளில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ரூ.98 லட்சம் நகைகளுடன் கொள்ளை யடிக்கப்பட்ட கார் கேரளாவுக்கு செல்லவில்லை என்பது உறுதியானது. எனவே கொள்ளையர்கள் கோவை அல்லது கோவை வழியாக திருப்பூர், ஈரோடு, நீலகிரிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதிய போலீசார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த பணியில் சைபர் கிரைம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் ஊழியர்கள் வந்த கார் மதுக்கரை அருகே தென்றல் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று காரை மீட்டனர். காரில், டிரைவர் சீட் அருகே கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கார் டிரைவர் அர்ஜூன், நகை கடை ஊழியர் வில்பர்ட் ஆகியோரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்று கொள்ளை சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
திருச்சூரில் இருந்து ரூ.98 லட்சம் மதிப்புள்ள நகைகள் காரில் கொண்டு வருவது கொள்ளையர்களுக்கு முன் கூட்டியே தெரிந்தது எப்படி? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. நகைக்கடை ஊழியர்களுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை-கேரள நெடுஞ்சாலையில் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இந்த சம்பவத்திலும் ஹவாலா கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் சென்னை பதிவு எண் கொண்டது. எனவே ஒரு தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காரின் பதிவு எண்ணை வைத்து சென்னையை சேர்ந்தவரிடம் விசாரித்தபோது, அந்த காரை கோவையை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும், காரை வாங்கியவர் உரிமையாளர் பெயரை மாற்றாமல் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையை சேர்ந்த ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். கொள்ளைக்கு பயன்படுத்திய கார், திருச்சூரில் இருந்து கோவைக்கு கடந்த ஒரு வாரமாக வந்து சென்றுள்ளது. எனவே அந்த காரில் இருந்து கொள்ளையர்கள் நோட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-
கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் வேல் முருகன், விஜயகுமார், பாலமுருகன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். ஓரிரு நாளில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம். திருச்சூரில் இருந்து நகை வருவதை முன்கூட்டியே கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்து இந்த கைவரிசை நடைபெற்று இருப்பதாகவும் சந்தேகிக்கிறோம். கொள்ளை நடைபெற்றபோது அந்த இடத்தில் பதிவான செல்போன் உரையாடல்கள் மற்றும் நகைக்கடை ஊழியர்களிடம் உள்ள செல்போனில் பதிவாகியுள்ள நம்பர்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து துப்புதுலக்கி வருகிறோம். கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம். இதுபோன்று விலைமதிப்புள்ள தங்கநகைகளை கொண்டு வரும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும் நகைவியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நகை வியாபாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story