கூடலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற லாரி-ஆட்டோ மோதல்; பெண் பலி


கூடலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற லாரி-ஆட்டோ மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 7:07 PM GMT)

கூடலூர் அருகே ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற லாரியும், ஆட்டோவும் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர், 

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி கல்லீங்கரை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தார் மற்றும் ஜல்லி கற்கள் கலந்த கலவை தேவாலா பகுதியில் தயாரிக்கப்பட்டு கூடலூர் வழியாக கல்லீங்கரைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

நேற்று காலை 11 மணிக்கு ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு கூடலூர் அருகே 3-ம் மைல் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சேரம்பாடியை சேர்ந்த டிரைவர் முகமது அலி (வயது 51) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது பாடந்தொரையில் இருந்து சில பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ எதிரே வந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது லாரி வேகமாக மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அதில் இருந்த பாடந்தொரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷர்ஷத் (வயது 22), சைனூதீன் மனைவி ஷபீனா (32), அவரது மகன் சிபின் (வயது 16), அசோகன் மகன் மணிகண்டன் (21), சுந்தரலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன் (20) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் மோதிய வேகத்தில் சாலையோரம் பக்கவாட்டில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் முகமது அலி படுகாயம் அடைந்தார்.

இதைகண்ட அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, ஷர்ஷத், ஷபீனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷபீனா பரிதாபமாக இறந்தார். ஷர்ஷத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடலூர் மற்றும் தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story