மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை
பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி,
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் கார்த்திக் (வயது 28). டிராக்டர் டிரைவர். கடந்த 2015-ம் ஆண்டு இவர், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போக்சோ சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பு கூறினார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கார்த்திக்குக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story