மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின தபால்துறை பணிகள் பாதிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தபால்துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இருப்பினும் பஸ்கள் வழக்கம் போல் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
நாமக்கல்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தபால் நிலையங்களில் மொத்தம் உள்ள 950 பேரில் நேற்று 760 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கிராமப்புறங்களில் பல தபால் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது. எனவே தபால் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
இதேபோல் மொத்தம் உள்ள 1,006 வங்கி பணியாளர்களில் 228 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வங்கி சேவையும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 210 இன்சூரன்சு ஊழியர்களில் 95 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்களை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 280 பேரில் 136 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் வருமானவரித்துறை அலுவலர்களும் 90 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழகத்தில் போக்குவரத்து மற்றும் மின்வாரிய தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இருப்பினும் போக்குவரத்து தொழிலாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சுமார் 10 சதவீத அளவில் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படவில்லை. லாரி, கார் உள்ளிட்ட இதர வாகனங்களும் வழக்கம் போல் இயங்கின. அனைத்து கடைகளும் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story