மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு


மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:00 AM IST (Updated: 9 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல், 

ஆன்-லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக செயலாளர் மோகன சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேகநாதன், மாநில முன்னாள் பொருளாளர் கோபிரத்தினம், மாவட்ட மொத்த மருந்து வணிகர் அணி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் தெய்வமணி வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நாமக்கல் தாலுகா முழுவதும் இருந்து மருந்து வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தாலுகா பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து ராசிபுரம் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் தாலுகா அளவிலான மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்-லைன் விற்பனையை தடுக்கக்கோரி தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் முடிந்து சங்கத்தின் சார்பில் தாசில்தார் ரகுநாதனிடம் ஆன்-லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. இதில் மூத்த நிர்வாகி ராஜூ, செயலாளர் செந்தில், பொருளாளர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அண்ணா சிலை முன்பு ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்செங்கோடு மருந்து வணிகர்கள் சங்க தலலவர் திருமுருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மருந்து வணிகர்கள் திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

பரமத்தி வேலூர் நகர மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் போக்கை மத்திய அரசு கைவிடக்கோரி பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story