கல்பாக்கம் அருகே கடத்தப்பட்ட குழந்தை 3 மாதங்களுக்கு பிறகு மீட்பு


கல்பாக்கம் அருகே கடத்தப்பட்ட குழந்தை 3 மாதங்களுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 5:00 AM IST (Updated: 9 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே கடத்தப்பட்ட பெண் குழந்தை 3 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடத்தியது தெரியவந்தது.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மானாமதி கிராமம் நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). இவரது மனைவி காளியம்மாள் (20). இவர்களது குழந்தை ஹரிணி(2). ஊசி, வளையல் உள்பட்ட பொருட்களை விற்பதற்காக வெங்கடேசன் கடந்த 16-9-2018 அன்று மினி டெம்போவில் மனைவி, குழந்தையுடன் சென்றார்.

கல்பாக்கத்தை அடுத்த கடப்பாக்கம் மற்றும் சுற்றுப்புறங்களில் வியாபாரத்தை முடித்து விட்டு அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பவுஞ்சூர் கிராமத்துக்கு வந்தார்.

அப்போது அவரது மினிடெம்போவின் முகப்பு விளக்கு பழுதடைந்தது. இதனால் சாலையோர கடையில் இரவு வெங்கடேன், மனைவி, குழந்தையுடன் படுத்து தூங்கினார். நள்ளிரவில் வெங்கடேசன் விழித்து பார்த்தபோது குழந்தை ஹரிணியை காணவில்லை. இதனால் குழந்தையின் பெற்றோர் பலத்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மிகுந்த துயரத்துக்கும் உள்ளாயினர்.

குழந்தை ஹரிணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் குழந்தையை பற்றி எந்த தகவலும் தெரிய வரவில்லை.

இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குழந்தையை கண்டுபிடிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதால் தேடும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், சங்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தமிழகம் முழுவதும் குழந்தையை தீவிரமாக தேடினர். பல்வேறு சமூக நல அமைப்புகளும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்களும் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, குழந்தையை பறிகொடுத்த நரிக்குறவ தம்பதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் போலீசாரிடம், கடத்தப்பட்ட குழந்தையை போல் மும்பையில் உள்ள ரெயில் நிலையத்தில் ஒருவர் இருந்ததாக அவர் தெரிவித்தார். இதனால் தனிப்படை போலீசார் மும்பை சென்றும் விசாரணை நடத்தினர்.

ஆனாலும் மாயமான குழந்தை ஹரிணியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மாமல்ல புரத்தை அடுத்த திருப்போரூரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை ஹரிணி வளர்க்கப்பட்டு வருவதாக நேற்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு செய்யூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் திருப்போரூரை சேர்ந்த சங்கீதா(26) என்ற பெண்ணுக்கு 8 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதும் அவர் இது குறித்து தனது நண்பரான மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரிடம் கூறியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து வீரபாண்டியனும், சங்கீதாவும் நோட்டம் விட்டு குழந்தை ஹரிணியை சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளனர். இதற்கு உடந்தையாக கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்த பிரகாஷ் என்கிற வசந்தகுமார் என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை கடத்தியதாக சங்கீதாவையும், வசந்தகுமாரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பின்னர் குழந்தை ஹரிணி பெற்றோரிடம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஒப்படைத்தார். 3 மாதங்களுக்கு பிறகு குழந்தை கிடைத்ததால் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியினர் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story