சென்னிமலை அருகே செல்போனில் பேசியபடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்; காப்பாற்ற சென்றவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர்


சென்னிமலை அருகே செல்போனில் பேசியபடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்; காப்பாற்ற சென்றவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர்
x
தினத்தந்தி 9 Jan 2019 5:45 AM IST (Updated: 9 Jan 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்த ஒரு பெண் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 28). ஈரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சங்கீதா வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இவருடைய கணவர் நவீன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக நவீனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சங்கீதா தன்னுடைய 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தன்னுடைய வீட்டை ஒட்டியுள்ள கிணறு அருகே நின்றுகொண்டு சங்கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர் செல்போனோடு கிணற்றில் விழுந்து விட்டார்.

இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (60), கதிரேசன் (வயது 25) ஆகியோர் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தனர்.

கிணற்றில் படிகள் ஏதும் இல்லாததால் 3 பேரும் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். அனைவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டு இருந்தது.

கிணற்றில் 3 பேர் தத்தளிப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் தவித்த 3 பேரையும் கயிறுகட்டி பத்திரமாக மீட்டு மேலே கொண்டுவந்தார்கள். அதன்பிறகு 3 பேரும் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story