ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று அனைத்து துறை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடங்கினார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று கலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சத்தி வட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி செந்தில்நாதன், அங்கன்வாடி பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசினார்கள். சங்க நிர்வாகிகள் கார்த்திக், சிவராஜ், ஈஸ்வரன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். முடிவில் வட்டார பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.
அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பேரூராட்சி சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம், அங்கன்வாடி சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதாமணி, சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க நம்பியூர் வட்டார தலைவர் அர்த்தனாரீஸ்வரன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ராமசாமி, விஜயகுமார், சுப்புலட்சுமி, சுப்பிரமணி, சுசீலா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கோபி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார கிளை தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இதேபோல் கோபியில் தபால் ஊழியர்கள், இன்சூரன்சு ஊழியர்கள், பொதுக்காப்பீட்டு கழகம் சார்பில் கோபி கள்ளிப்பட்டி பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்சு சங்கத்தின் கோபி தலைவர் உமாராணி தலைமை தாங்கினார். பொது காப்பீட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தபால் ஊழியர் சங்கத்தின் கோபி இணைச்செயலாளர் கார்த்திகேயன், மோகனசுந்தரம், கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்க தலைவர் கருப்பணன் உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக அனைவரையும் தில்லைகுமார் வரவேற்று பேசினார்.
கொடுமுடி தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ஏசையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் போக்குவரத்து துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
நேற்று ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. கொடுமுடியில் உள்ள கனரா, பல்லவன் வங்கிகளில் பணியாளர்கள் வராததால் பணபரிவர்த்தனை பாதித்தது. மற்ற வங்கிகள் வழங்கம் போல் இயங்கின.
ஊஞ்சலூர் அருகே உள்ள நடுப்பாளையம், சோளங்காபாளையம், தாமரைப்பாளையத்தில் செயல்படும் கனரா வங்கிகளில் நேற்று ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. அந்தந்த கிளை மேலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். அதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
பெருந்துறை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலை 11.30 மணி முதல் 11.45 வரை அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்துறை வட்டார அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் கணேஷ்பிரியா ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். 5 பெண்கள் உள்பட 31 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
பவானி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார கிளை செயலாளர் செந்தாமலர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் திருமுருகன், வருவாய்த்துறை வட்ட கிளை தலைவர் அதிர்ஷ்டராஜ் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்ட கிளை தலைவர் முருகன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாலா கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க வட்டார தலைவர் அம்புரோஸ், அரசு ஊழியர் சங்க வட்டார துணை தலைவர் காந்திமதி உள்ளிட்ட 300–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அந்தியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு, நேற்று காலை 11 மணி அளவில் அனைத்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் வட்டார தலைவர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.