பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: 4 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு


பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: 4 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 9:30 PM GMT (Updated: 8 Jan 2019 8:40 PM GMT)

பழக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

தென்காசி,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர் காதர் ஒலி தெருவை சேர்ந்த அப்துல்ரஹீம் மகன் முகம்மது கனி மாலிக். இவர் புளியரையில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 2012-ம் ஆண்டு புளியரையை அடுத்த தெற்குமேடு பாக்கியம் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 60), குமார் (42), இசக்கிதுரை (45), முருகன் (42) ஆகியோர் பழம் வாங்க சென்றனர்.

பின்னர் அவர்கள் வாங்கிய பழங்களுக்கு முகம்மது கனி மாலிக் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து தகராறு செய்துள்ளனர். மேலும் கடையில் இருந்த அரிவாளால் முகம்மது கனி மாலிக்கை வெட்டினர். இதுகுறித்து புளியரை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட நடராஜன், குமார், இசக்கிதுரை, முருகன் ஆகிய 4 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

Next Story