சேரன்மாதேவியில் பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


சேரன்மாதேவியில் பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 17 பவுன் நகையை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஆலடி தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60), விவசாயி. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தினமும் இவர் தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றும் இவர் வழக்கம் போல காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் சாவியை கதவின் அருகே வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கதவு அருகில் சாவி வைப்பதை நன்கு தெரிந்த மர்மநபர், அதை எடுத்து கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசில் தங்கவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 17 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story