மைசூரு டவுனில் சம்பவம் 2 வீடுகளில் ரூ.5 லட்சம் நகைகள், பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மைசூரு டவுனில், 2 வீடு களின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மைசூரு,
மைசூரு டவுன் சரஸ்வதிபுரம் அருகே நிவேதிதா நகரில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர் கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அனைத்து அறைகளின் கதவுகளும் திறந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டது மஞ்சுநாத்துக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர் சரஸ்வதிபுரம் போலீசில் புகார் செய்தார்.
ரூ.5 லட்சம் நகைகள், பணம் திருட்டு
இதேபோல், மைசூரு குவெம்பு நகரில் வசித்து வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தீபு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டார்கள். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சரஸ்வதிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் திருட்டுப்போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story