கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை


கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
x
தினத்தந்தி 9 Jan 2019 5:00 AM IST (Updated: 9 Jan 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கர்நாடகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக இன்றும்(புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு, 

புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடிப்படை சம்பளத்தை...

நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் 2 நாட்கள், அதாவது 8-ந் தேதி(நேற்று) மற்றும் 9-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்தன.

பஸ்கள் ஓடவில்லை

அதன்படி கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்பு நடந்தது. போக்குவரத்து ஊழியர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக அவர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். இதன் காரணமாக கர்நாடகத்தில் நேற்று 90 சதவீதம் அளவுக்கு பஸ்கள் ஓடவில்லை. 10 சதவீத பஸ்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடின.

சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, ஹாவேரி, உப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. மைசூரு, உப்பள்ளி, சித்ரதுர்கா, பெலகாவி, தாவணகெரே, கதக், யாதகிரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை. பெங்களூருவை பொறுத்தவரையில் பெரும்பாலான பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பஸ்கள் ஓடியதை பாா்க்க முடிந்தது.

வெறிச்சோடி காணப்பட்டது

இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் சற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பஸ்கள் அங்கு வந்து சென்றன. அதேபோல் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்திற்கும் பஸ்களின் வருகை மிக குறைவாக இருந்தது. மேலும் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வருகையும் குறைவாக இருந்தது.

குறைந்த எண்ணிக்கையில் ஓடிய பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. பெங்களூரு மல்லேசுவரத்தில் ஒரு பி.எம்.டி.சி. பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இந்த முழு அடைப்புக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை. இதனால் 80 சதவீத ஆட்டோக்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாகன நெரிசல் குறைவு

ஆனால் அந்த அளவுக்கு ஆட்டோக்கள் ஓடவில்லை. சுமார் 70 சதவீத ஆட்டோக்கள் இந்த முழு அடைப்பில் பங்கேற்றது என்றே சொல்லலாம். குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்டோக்கள் ஓடின. இதன் காரணமாக, பெங்களூரு நகர சாலைகளில் வாகன நெரிசல் மிக குறைவாக இருந்தது.

சாலைகளில் ஆட்டோக்கள் மற்றும் பி.எம்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமாக இருக்கும். இவை இரண்டும் முழு அடைப்பில் பங்கேற்றதால், சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்தன.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு எம்.ஜி.ரோடு, ஜே.சி.ரோடு, ஓசூர் ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோடு, கெம்பேகவுடா ரோடு, கே.எச்.ரோடு, ரெசிடென்சி ரோடு என முக்கியமான சாலைகளில் நெரிசல் மிக குறைவாக காணப்பட்டது.

கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகள், தபால் ஊழியர்கள் பணியை புறக்கணித்து முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வணிக வளாகங்கள்

இதனால் வங்கி, தபால் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஊழியர்கள் இல்லாததால் வங்கி மற்றும் தபால் அலுவலக பணிகள் முடங்கின. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

கடைகள், பெரிய வணிக வளாகங்கள் வழக்கம்ேபால் செயல்பட்டன. ஆனால் அங்கு பொதுமக்களின் வருகை மிக குறைவாக இருந்தது. கர்நாடக அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஊர்வலம்

திரையரங்குகளில் சினிமா காட்சிகள் எப்போதும் போல் திரையிடப்பட்டன. கே.ஆர்.மார்க்கெட் உள்பட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் வியாபாரம் எப்போதும்போல் நடந்தன. பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். முழு அடைப்பால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் 50 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போலவே செயல்பட்டன. தனியார் நிறுவனங்களும் திறக்கப்பட்டு இருந்தன. தொழிற்சங்கத்தினர், பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சுதந்திர பூங்காவை வந்தடைந்தனர். அவர்கள் தங்களின் கைகளில் கொடிகளை ஏந்தி வந்தனர்.

ஆதரவும்-எதிர்ப்பும்...

மொத்தத்தில் கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சுமார் 55 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கர்நாடகத்தில் இன்றும்(புதன்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. பெங்களூருவை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Next Story