விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை வழங்க கோரி பட்டை நாமம் போட்டு விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்


விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை வழங்க கோரி பட்டை நாமம் போட்டு விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி விருத்தாசலத்தில் பட்டை நாமம் போட்டு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று, அவர்கள் பாம்பு கறியை சாப்பிட போவதாக அறிவித்துள்ளனர்.

விருத்தாசலம், 

கரும்பு நிலுவை தொகையை வழங்காத சித்தூர் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் விருத்தாசலம் பாலக்கரையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

கடந்த 5 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.93 கோடியை அரசு பெற்று தர வேண்டும், கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகை மற்றும் மாநில அரசின் ஆதரவு தொகையை உடனடியாக அரசு பெற்று தர வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான ஆதரவு தொகையை உடனே வழங்க வேண்டும், மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குதல், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நேற்று முன்தினம் மாலை வரை அதிகாரிகள் யாரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விடிய, விடிய விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

இதில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் அனைவரும் அரை நிர்வாண போராட்டத்தை நடத்தினர். அப்போது சட்டை அணியாமல், பட்டை நாமம் போட்டும், காதில் பூக்களை வைத்துக்கொண்டும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாதவன், வேல் முருகன், ராஜா, வெங்கடேசன், சாத்துக் கூடல் சக்திவேல், பெரியசாமி, நீலகண்டன், கவியரசு, சுப்பிரமணியன், ஸ்டாலின், கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள், ஆண்டவர், சின்னமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், ஆலைக்கு விவசாயிகள் கரும்பு வெட்டி அனுப்பி சுமார் 23 மாதங்கள் ஆகியும் இந்த கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய தொகையை தர மறுக்கிறது. கரும்புக்கான நிலுவை தொகையை மாவட்ட கலெக்டர் தான் வாங்கித் தர வேண்டும். ஆனால் அவரும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் கண்டு கொள்வதில்லை.

தமிழக அரசு விவசாயிகளை அடிமையாக பார்க்கிறது. இந்த அடிமைகளுக்கு எதற்கு பணம் தரவேண்டும் என்று கூறி நிலுவை தொகையை தர மறுக்கிறார்கள். இதனை கண்டித்து நேற்று (நேற்று முன்தினம்) காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு பணத்தை வாங்கித் தருவார்கள் என்று நம்பினோம். ஆனால் அவர்கள் வாங்கித் தரவில்லை. ஆலை நிர்வாகம் எங்களுக்கு பணம் தராமல் பட்டை நாமம் போட்டு விட்டது, அதுமட்டுமில்லாமல் விவசாயிகளிடம் இருந்து ஆலை நிர்வாகம் கையெழுத்து வாங்கி வங்கியில் ரூ.400 கோடியை வாங்கி விவசாயிகள் தலையில் கட்டி விட்டது.

இதனால், கடனைக் கேட்டு விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் மூலம் எங்கள் காதிலும் பூ வைத்தது போன்று ஆகிவிட்டது. அதனால் தான் இன்று (அதாவது நேற்று) பட்டை நாமம் போட்டு காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், இனிமேல் நாங்கள் சாப்பிட வழியில்லை.

இதனால் நாளை (அதாவது இன்று) நாங்கள் பாம்பு கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். எங்களை பாம்பு கறியை சாப்பிடுவதற்கு வைத்து விடாதீர்கள். விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை பெற்றுத் தரும் வரை எங்களது போராட்டம் பல்வேறு வடிவில் தொடரும் என்றார் அவர்.

முன்னதாக விவசாயிகளின் போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

Next Story