அரசின் இருசக்கர வாகனம் வாங்க மானியம் 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு


அரசின் இருசக்கர வாகனம் வாங்க மானியம் 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:03 AM IST (Updated: 9 Jan 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

மானிய விலையில் அரசின் இருசக்கரவாகனம் வாங்க 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

சிவகங்கை,

 கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் பணியிடங்களுக்கும், பிற இடங்களுக்கும் எளிதில் சென்று வர ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை அம்மா இருசக்கர வாகனம் என்ற பெயரில் செயல்படுத்த தமிழக முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். இதில் 50 சதவீத மானியம் அல்லது ரூ.25ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டும் (2018–19) இந்த திட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

வருட வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் இருசக்கர வாகன மானியம் வழங்கப்படும். மானியத் தொகை போக வாகனத்திற்கான மீதத் தொகையை செலுத்த சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் கிராமப்புறத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் பெண்கள். மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குடும்ப தலைவியாகக் கொண்ட பெண்கள். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள். ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதுபோல் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.31ஆயிரத்து 250 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பெண்களில் 35 வயதிற்கு மேற்பட்ட 40 வயதிற்குட்பட்ட திருமணமாத பெண்கள். ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள். திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்பப் படிவத்துடன் பிறந்த தேதிக்கான சான்று, இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகள்). வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஒட்டுனர் உரிமம். வருமானச் சான்று. பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட வேலை உறுதிச்சான்று. ஆதார் அட்டை, கல்வித் தகுதி (மாற்றுச் சான்று உள்ளிட்டவை அடங்கியது). புகைப்படம், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, இருசக்கர வாகன மாதிரி விலைப்பட்டியல் ஆகியவைகளை இணைத்து அனுப்ப வேண்டும்

தகுதியான விண்ணப்பத்தாரர்களில் ஊரகப் பகுதிகளில் பணிபுரிந்து வரும் பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகர்புறத்தில் உள்ள பெண்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட ஊரகப் பகுதி, நகர்புறப் பகுதி அலுவலகங்களில் நேரிலோ அல்லது விரைவு தபால், பதிவு அஞ்சல் ஆகியவற்றின் மூலமாகவோ வருகிற 18–ந்தேதி மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Next Story