மணல் திருட்டை தடுக்கக்கோரி மாணவர்களை திரட்டி மறியல்


மணல் திருட்டை தடுக்கக்கோரி மாணவர்களை திரட்டி மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 10:45 PM GMT)

திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டி கிராமத்தில் குண்டாற்றை ஒட்டிய பகுதியில் ஆற்றுமணல் திருடப்படுவதை தடுக்கக்கோரி மாணவ-மாணவிகளை திரட்டி கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

நரிக்குடி,

திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டி, பனையூர் சேதுபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நீராதாரமாக குண்டாறு உள்ளது. இந்த பகுதி விவசாய பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் இப்பகுதி மக்கள் குண்டாற்றை நம்பியுள்ளனர்.

தற்போது ரெங்கையன்பட்டி கிராமம் அருகே குண்டாறு கரை ஓரம் உள்ள பட்டா நிலங்களில் செங்கல் சூளைக்கு பயன்படும் சவுடு மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று விட்டு சட்டவிரோதமாக ஆற்றுமணல் அள்ளி வருவதாக கூறப்படுகிறது. மணல் திருட்டு குறித்து இந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மணல் திருட்டால் ரெங்கையன்பட்டி, செல்லையபுரம், இலுப்பையூர், காத்தான்பட்டி மற்றும் சீலம்பட்டி உள்பட 7 கிராமங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி ரெங்கையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளை திரட்டி அந்த கிராமத்தினர் திருச்சுழி-கமுதிசாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். மணல் திருட்டை தடுத்து குவாரியை மூட கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Next Story