ரூ.1½ கோடி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது


ரூ.1½ கோடி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட்- அதிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அம்மன்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகன் சுனில் குமார். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் கைலாசநாதன். இவருடைய மகன் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுடன், ஆதித்யா பப்ளிக் பள்ளியை நடத்தி வருகின்றனர். கைலாசநாதன் இந்த பள்ளியின் தாளாளராக உள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் பள்ளி மற்றும் தொழிலை மேம்படுத்த கடந்த 2014-ம் ஆண்டு வீடு மற்றும் நிலப்பத்திரத்தை வைத்து என்னிடம் ரூ.1 கோடியே 42 லட்சம் கடன் பெற்றனர். ஆனால் என்னிடம் அவர்கள் கொடுத்த வீடு மற்றும் நில ஆவணங்களை மோசடியாக உருவாக்கியதுடன், எனக்கு தெரியாமல் கைலாசநாதனின் மனைவி பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் அந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடனும் பெற்றுள்ளனர். இதை அறிந்த நான் அவர்களிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படையினர் நேற்று காலை கோவை அவினாசி ரோடு சித்ரா பஸ் நிறுத்தம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story