விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்


விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா வழங்கினார்.

கோவை,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பெரியண்ணன் (வயது 29). இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், அதிக்சா என்ற 2½ வயது குழந்தையும் உள்ளனர். பெரியண்ணன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு 8 மணியளவில் தர்மபுரி டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்து சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் ரெட்டிபட்டி பஸ்நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் பெரியண்ணன் பரிதாபமாக இறந்தார்.அவர் பணியில் இருந்த போது ஆக்சிஸ் வங்கியில் போலீசாருக்கான சம்பள கணக்கு தொடங்கி இருந்தார். மேலும் அந்த வங்கியானது சீருடை பணியாளர்கள் சம்பள கணக்குகளுக்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கி வருகிறது. அதன் பயனாக பெரியண்ணன் விபத்தில் இறந்தது குறித்து அந்த வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் விபத்து வழக்கு மற்றும் இதர சான்றிதழ்கள் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு பெரியண்ணன் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்க வங்கி அதிகாரிகள் முன்வந்தனர். கோவை ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, ஆக்சிஸ் வங்கியின் தலைவர் சக்திவேல் ஆகியோர் பெரியண்ணன் மனைவி சுகந்தியிடம் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘விபத்தில் சிக்கி இறந்த போலீசாரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்த வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன். இந்த தொகை வழங்கப்பட்டதுடன், பெரியண்ணன் ஏற்கனவே அந்த வங்கியில் கடனாக பெற்ற ரூ.3 லட்சத்துக்கான பாக்கி தவணை தொகையையும் கடன் காப்பீடு மூலம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உள்பட வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story