பொதுத்துறை பங்குகள் விற்பனையை கைவிட கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொதுத்துறை பங்குகள் விற்பனையை கைவிட கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:49 AM IST (Updated: 9 Jan 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை பங்குகள் விற்பனையை கைவிட கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்கள் நல சட்டங்கள் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும். அரசுத்துறை சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மத்திய-மாநில பொதுத்துறைகளின் பங்குகள் விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகபெருமாள் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பழைய பஸ்நிலையம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜான்சன்பேட்டை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வருவாய் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கி ஊழியர்களும் பெருமளவில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story