வானவில்: 12 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் சாம்சங் செல்போன்கள்
எந்நேரமும் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பது நம்மில் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. அதில் போன் பேசுகிறோமோ இல்லையோ, இன்டர்நெட் இணைப்பு கட்டாயம் இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது.
இன்டர்நெட்டுக்காக, வை-பை, டேட்டா போன்றவற்றை ஆன் செய்து வைத்திருக்கும்போது சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது. ஒரு நாளைக்கே ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ‘லித்தியம் அயன் பேட்டரி’ பயன்படுத்தப் படுகிறது. இதை சார்ஜ் செய்ய குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவிட வேண்டும். எந்திரமயமாகி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு முக்கியமாகிறது.
எனவே சீக்கிரம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் பேட்டரியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது. அதுதான் ‘கிராபைன்’ பேட்டரி. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அளவிற்கு லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் ஆகிறதோ, அந்த இலக்கை வெறும் 12 நிமிடங்களில் கிராபைன் பேட்டரி எட்டிவிடும் என்கிறார்கள்.
இந்த வகை பேட்டரிகளை, சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த அந் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. கூடிய விரைவில் கிராபைன் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த சாம்சங் முடிவு செய்திருப்பதாக ‘சாம்மொபைல்’ இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவிலும், தென்கொரியாவிலும் சாம்சங் காப்புரிமம் பெற்று இருக்கிறது.
ஆனால், கிராபைன் பேட்டரிகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். எனினும், கிராபைன் பேட்டரிகளின் தயாரிப்பு அதிகமாகும் போது இதன் விலை கணிசமாக குறையும் என்று சாம்சங் எதிர்பார்க்கிறது.
Related Tags :
Next Story