மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் ராமன் தகவல்


மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 7:26 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வுநாள் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை ஆட்சியர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் ஒருவருக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 5–ந் தேதி நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,400 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1,065 பேர் தேர்வாகி உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட குறைதீர்வுநாள் கூட்டத்தில் 829 மனுக்கள் பெறப்பட்டு அதில் 159 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 4 வகையான தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பாலகம் நடத்தவும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யவும் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் இடம் தேர்வு செய்து, ஆவின் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும்.

மேலும் சிறுதொழில் தொடங்க மற்றும் பெட்டிக்கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கி மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் கடன் வழங்க இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று தொழில்தொடங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story